இலங்கையர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்திய ஆட்சியாளர்கள் - தொடரும் அச்சநிலை
நாட்டு மக்கள் உணவின்றி கஷ்டப்படும் யுகத்தினை ராஜபக்சர்கள் ஆரம்பித்துவிட்டு அமைதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne )தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்த அவர், தற்போது நிலவும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து உயிர்பிழைப்பது தொடர்பில் மாத்திரமே மக்கள் கவலைப்படுகின்றார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் அடுத்த அரச தலைவர் யார் என்பது முக்கியமான ஒரு விடயம் அல்ல. எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக செயற்படவுமில்லை.
இலங்கையில் நிலவும் மின்சார தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நெருக்கடிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அமைச்சரவையுடன் கலந்துரையாடி, உரிய தீர்வை காண வேண்டும்.
அமைச்சுகளுக்குள் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பு அரச தலைவர், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவைக்கு உள்ளது.
ஆகவே அமைச்சர்கள் ஊடகங்களுக்கு பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
முக்கியமாக, தற்போது ஆட்சியில் உள்ள ஊழல்மிக்க நிர்வாகத்தை தூக்கியெறிவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ” எனக் கூறியுள்ளார்.
