விற்பனை செய்யப்படும் இலங்கையின் வளங்கள்! மொட்டு கட்சியின் நிலைப்பாடு
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், ஒருவரின் தனிப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கையின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் சொத்துக்களையும் வளங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் வளங்கள்
இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் எதிர்ப்போம்.
இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. இலங்கையின் வளங்கள் எதிர்காலத்துக்காக பாதுகாக்கப்பட வேண்டும்.
மொட்டு கட்சி
சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு வீழ்ச்சியடைந்த கட்சி என பலர் கருத்து வெளியிடுகின்றனர்.
எனினும், இது ஒரு பொய். எமது கட்சியை தோல்வியடைந்த கட்சியாக வெளிக்காட்ட பல சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தொடர்ந்தும், எமக்கெதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலத்தில் எமது கட்சி உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
காலிமுகத்திடல் போராட்டத்தின் போது எமது கட்சி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். எனினும், நாடாளுமன்றத்துக்குள் அதிபராக ஒருவரை தெரிவு செய்ய எமக்கு அதிகாரம் இருந்தது.
அதிபர் தெரிவு
நாம் தோல்வியடைந்த கட்சியாக இருந்திருந்தால், எம்மால் அதிபர் ஒருவரை நியமித்திருக்க முடியாது.
சதித்திட்டங்கள் காரணமாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் விரட்டியடிக்கப்பட்டாலும் ஒரு கட்சியாக நாம் தோல்வியடையவில்லை.
இலங்கையில் எமது கட்சி பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. நாட்டை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |