மைத்திரியின் பதவிக்கும் ஆபத்து - திரைமறைவு இராஜதந்திர நகர்வில் சந்திரிக்கா!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
சுதந்திரக்கட்சியின் யாப்பில் இருக்கும் சில ஷரத்துக்களின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை நீக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.
இந்த திட்டத்தின் பின்னணியில் முன்னாள் அதிபர் சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுதந்திரக்கட்சியின் யாப்புக்கு அமைய அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டால், அவருக்கு கட்சியின் தலைவர் பதவி உரித்தாகும்.
மைத்திரிக்கு எதிராக திட்டம்
எனினும் அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னர், கட்சியின் தலைவர் பதவிக்கு யாப்பின் அடிப்படையில் மீண்டும் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.
இந்த ஷரத்தை பயன்படுத்தியே மைத்திரியை நீக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தென்னிலங்கை அரசியில் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தலைவர் தெரிவிற்கு தயார் நிலை
எனவே மைத்திரிபால சிறிசேனவை நீக்கி விட்டு, தென் மாகாணத்தை சேர்ந்த சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை கட்சியின் தலைவராக தெரிவு செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

