எரிபொருள் கோரி கண்ணீர் விட்டு கதறிய சாரதி - ஆர்ப்பாட்டக்காரர்களால் பரபரப்பு; களத்தில் காவல்துறை!
வவுனியாவில் எரிபொருள் கோரி ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எரிபொருளுக்கு போராட்டம்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் செயலி மூலம் வெளியாகிய தகவலுக்கு அமைய நேற்று இரவு முதல் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பலர் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.
ஆனால், இன்று காலை 10.30 மணிவரை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வராமையால் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பழைய பேருந்து நிலையம் முன்பாக ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருவர் கைது
இதன் போது சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை வீதியை விட்டு அகற்றியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
அத்துடன், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடனும் கலந்துரையாடினர். இதன்போது எரிபொருள் இன்னும் வந்து சேரவில்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
கண்ணீர் விட்டு கதறிய நபர்
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றிய காவல்துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்கு மூலங்களைப் பெற்ற பின் எச்சரித்து விடுதலை செய்தனர்.
இதேவேளை, முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு முதல் நிற்பதாகவும் இரண்டு லீற்றர் பெற்றோலாவது தாருங்கள் என கண்ணீர் விட்டு அழுதிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
