தென்னிலங்கை வன்முறை விவகாரம்; தீயிடப்பட்ட ரோகிதவின் ஹோட்டல் - விசாரணையையடுத்து வெளியான தகவல்!
சிறிலங்காவில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியின் போது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 10 ஆம் திகதி, கொலொன்னவில் அமைந்துள்ள ரோஹித ராஜபக்சவிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீ வைத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கராஜாவுக்கு அருகாமையில் கொலன்ன, எம்பிலிப்பிட்டிய கொங்கலகந்தவில் கிரீன் ஈகோ லொட்ஜ்' என்ற பெயரில் இந்த விருந்தகம் அமைந்துள்ளது.
திருடப்பட்ட உபகரணங்கள்
இந்த குழு ஹோட்டலில் இருந்து உபகரணங்களை திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொலன்ன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 25 மற்றும் 50 வயதுடைய கொலொன்னவை வசிப்பிடமாக கொண்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், தீயிடப்பட்ட ஹோட்டல் மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவருடையது என்ற தகவல் வெளியானது.
விசாரணையில் வெளியான தகவல்
எனினும் இரண்டாவது மகனான யோசித்த, அது தம்முடைய விருந்தகம் அல்ல என்று மறுத்திருந்தார். எனினும் காவல்துறை விசாரணைகளின் போது, குறித்த விருந்தகம், மூன்றாவது மகனான ரோகிதவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
மூன்றாவது மகனான ரோகித தனது தந்தை பிரதமராக இருந்த காலத்தில் எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்கவில்லை.
இருப்பினும் அவர் அடிக்கடி அலரிமாளிகையில் பிரசன்னமாகியிருந்தார். அவருடைய வருமான ஆதாரம் தொடர்பாகவும் தகவல் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

