விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபய! விசாரணைகளை கோரும் மொட்டு கட்சி
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கப்பட்டதன் பின்னணியில், வெளிநாட்டு சக்திகள் உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி சபாநாயகர் குறித்த விடயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ள போதிலும், ஏன் ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அமைதி காக்கின்றன என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சதித்திட்டங்கள்
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணையை கோரும் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சதித்திட்டங்கள் காரணமாக பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடாது மௌனம் காப்பதாக பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தான் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தின் போது, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என சபாநாயகர் தெரிவித்ததுடன், விசாரணைகள் தொடர்பான விடயங்கள் எதுவும் தெரியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டத்தை பிரசன்ன ரணதுங்க நினைவூட்டியுள்ளார்.
வன்முறைகள்
திட்டமிட்ட கும்பலால் இழைக்கப்பட்ட வன்முறைகளால் சொத்துக்களை இழந்த பல அரசியல்வாதிகளால் தானும் ஒருவன் என அவர் குறிப்பிட்டுள்ளதோடு, மனித உரிமை ஆணைக்குழுவிடம் காணொளிகளுடன் இது தொடர்பான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரண்டு தடவை தான் விசாரணைகளிற்காக முன்னிலையாகியிருந்த போதிலும், மந்த கதியிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |