வெள்ளிக்கிழமை விடுமுறை..! அரச ஊழியருக்கு கவிதையில் பதிலடி கொடுத்த அமைச்சின் செயலாளர்
வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் அரச பணியாளர் ஒருவர் எழுதிய கவிதைக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கவிதை மூலம் பதில் எழுதியுள்ளார்.
இலங்கையின் பொது நிர்வாக அமைச்சு, அரச பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்து, வீட்டுத்தோட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு முன்னதாக தீர்மானித்திருந்தது.
எனினும் எரிபொருள் நிலைமை மேம்பட்டதால், நிர்வாகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியதால், வெள்ளிக்கிழமை விடுமுறை திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் ஒரு அரச பணியாளர், இந்த புதிய முடிவைப் பற்றி வெளிப்படையாக மகிழ்ச்சியடையவில்லை, தனது வீட்டுத் தோட்டத்தில் செடிகள் வளர ஆரம்பித்துவிட்டதாகவும், அதிக வாழ்க்கைச் செலவு காரணமாக வேலைக்குச் செல்வது கடினமாக இருப்பதாகவும் ஒரு கவிதை எழுதினார்.
கீழ்மட்ட அரச பணியாளர்கள் படும் இன்னல்கள் மூத்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்றும் அவர் தமது கவிதையில் வேதனை தெரிவித்திருந்தார்.
அவரது கவிதையை பார்த்த பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே உடனே அவரும் தனது சொந்த கவிதை மூலம் குறித்த அரச பணியாளருக்கு பதிலளிக்க முடிவு செய்தார்.
அதில், போதிய மழை பெய்து பயிர்கள் நன்றாக வளரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், முறையிட்டவர் தனது திறமையைக் கருத்தில் கொண்டு பொருத்தமான வேலையைக் கண்டுபிடித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரச பணியாளர்கள், தங்கள் வேலையில் இருந்து தற்காலிக விடுப்பு எடுப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தை அமைச்சின் செயலாளர் தமது கவிதையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
