கோட்டாபயவின் புகைப்படத்துடன் நடு வீதியில் ஒப்பாரி வைத்து போராட்டம்!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் கொட்டகலை நகரில் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் படுத்தும், ஒப்பாரி வைத்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், கோட்டாபயவும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன் பசில் ராஜபக்சவின் புகைப்படத்தையும் கோட்டாபயவின் புகைப்படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் கோட்டபாயவின் படத்திற்கு செருப்பால் தாக்குவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருத்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கொட்டகலை பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் சுதந்திரமாக செல்வதற்கு போராட்டக்காரர்கள் இடமளித்தமை விசேட அம்சமாகும்.












