எதிரணியின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்க் கட்சிகள் - கடுமையாக குற்றம் சுமத்தும் ரணில்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சி பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இவ்வாறான நிலையில், இந்த பேச்சு குழம்பியமைக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றார்.
ஆனால், அதிபரின் சர்வகட்சிப் பேச்சுவார்த்தையை யாரும் குழப்பவில்லையெனவும், தாம் அந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுப்பதாக இருந்தால் அதிபரால் சில விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் நிபந்தனை விதித்திருந்ததாகவும், அந்த நிபந்தனைகள் எவையும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிபந்தனைகளை நிறைவேற்றாத ரணில்

இவ்வாறான நிலையிலேயே அதிபரின் சர்வ கட்சி பேச்சு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது.
அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க,
“அரசு முன்னெடுத்த அரசியல் தீர்வு தொடர்பான விவகாரங்களை எதிரணிகளே குழப்பியடித்தன. தமிழ்க் கட்சிகள் அரசுக்கு இந்த விடயத்தில் ஒத்துழைத்தாலும் அவர்களும் எதிரணியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றனர்.
எதிர்க்கட்சிகள் தான் குழப்பியடிக்கும் வகையில் செயற்படுகின்றன. இறுதியாக நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்திருந்தது.
குழப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

இதிலிருந்து இந்த முயற்சியைக் குழப்பியடிக்கும் எதிரணியின் வியூகம் எமக்குத் தெரிகின்றது. தமிழ்க் கட்சிகள் தீர்வு விடயத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினாலும் அவர்களும் எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுகின்றார்கள்.
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றாலே ஆதரவுகளும் எதிர்ப்புக்களும் இருக்கத்தான் செய்யும். அதற்காக நாட்டினதும் மக்களினதும் நன்மை கருதிய செயற்பாடுகளை எதிர்ப்பதில் அர்த்தமில்லை.
தேசிய இணக்கப்பாட்டுப் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் சர்வகட்சி பேச்சை முன்னெடுத்துச் செல்லலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.