ரணில் சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருகிறார்..! சுமந்திரன் தகவல்
அதிபர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் போராட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வில் கருத்துரைக்கும் போதே சுமந்திரன் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க பயன்படுத்தப்படும் சட்டம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கொடூரமான சட்டம் 1979 இல் ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அது நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து நீடித்தது, அதை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் தமக்கு ஏற்படும் எதிர்ப்பிற்கு எதிராக பயன்படுத்த முடிந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா, தன்னுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் எவ்வாறு கொடூரமாக நடத்தப்பட்டதை, தான் நேரில் பார்த்ததாகக் கூறினார்.
எனவே அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க எப்போதும் பயன்படுத்தப்படும்
இந்த மனிதாபிமானமற்ற சட்டத்திற்கு எதிராக மக்கள் திரள வேண்டிய நேரம் இது " எனக் குறிப்பிட்டார்.
