வீதி ஓரத்தில் கிடந்த சடலம் - கொலையா விபத்தா; தீவிர விசாரணையின் ஆரம்பக்கட்டத்தில் வெளியாகியுள்ள தகவல்!
இரண்டாம் இணைப்பு
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் மொரஹல, பலாங்கொடை, மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த நதீர சம்பத் வயது 27 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தின் உடலில் வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும், அருகில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் (சீ.சீ.டீ.வீ) அந்த நபர் விபத்தில் சிக்குவது பதிவாகியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த விபத்தை ஏற்படுத்திய நபர்கள் தொடர்பில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
முதலாம் இணைப்பு
கொட்டகலை பிரதேசத்தில் வீதி ஓரத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதி, கொட்டகலை மேபீல்ட் சந்திப் பகுதியில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியின் ஓரத்தில் சடலம் ஒன்று இருப்பதாக, பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து, திம்புள்ள பத்தனை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு, தடயவியல் பிரிவு காவல்துறையினரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
காவல்துறையின் தீவிர விசாரணை

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் காயங்களுடன் காணப்படுவதாகவும், இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வீதி விபத்தில் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறையினர் விடுத்துள்ள வேண்டுகோள்

உயிரிழந்தவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரிய வந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





