யாழில் மீண்டும் பாரிய வர்த்தக நடவடிக்கை - விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை மக்கள் பாவனைக்காக மீண்டும் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
300 மில்லியன் ஒதுக்கீடு
சுமார் 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த வியாபார மத்திய நிலையத்தினை விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் வினைத் திறனாக செயற்படுத்துவது தொடர்பாக, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்களின் பிரதிநிகள் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
இந்த பொருளாதார மத்திய நிலையத்தின் வேலைத்திட்டங்கள் 3 கட்டங்களாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. அதற்கமைய 2 கட்டவேலைத் திட்டங்கள் முடிவுற்றுள்ள நிலையில், இறுதிக்கட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடலே இன்றைய தினம் இடம்பெற்றது.
அதன்போது மின்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது. எனவே இந்த பொருளாதார மத்திய நிலையம் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டால், இதன் மூலம் வரியற்ற கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நன்மை
ஆகவே உள்ளூர் விவசாயிகள், வெளியூர் விவிசாயிகள் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர் எனப் பலரும் நன்மையடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலாக இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி அப்போது பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்சவால் இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டதோடு, நினைவுப் பலகையும் திரைநீக்கம் செய்யப்பட்டது.
இருப்பினும் அதன் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மூடப்பட்டிருந்தது.
மீண்டும் திறப்பு
அதன் பின்னர் மீண்டுமொரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் காரணமாக தற்போது கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மீண்டும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆகவே புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக பதவியேற்று முதலாவது பயணமாக இன்று யாழிற்கு வந்துள்ள மஸ்தான், பொருளாதார மத்திய நிலைமத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.