ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கடுமையாக வசைபாடி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சுகாஸ்! (காணொளி)
தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சதிக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் துணை போகின்றார்கள் என ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் எஜமானின் கட்டளைக்காக ஊடகவியலாளர்கள் தமிழ்த்தேசியத்தின் கட்டமைப்பை உடைக்கின்றார்கள் எனவும் தமிழ்த்தேசியத்தை அழிக்க முற்படுகிறார்கள் எனவும் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க. சுகாஸ் தொடர்ச்சியாக பல குற்றாச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பியமைக்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் மன்னிப்பு கோருங்கள். தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறைத்திருத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம்.
தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் ஊடகங்கள்
எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. பல்வேறு வகையான செய்திகள் திட்டமிட்ட முறையில் அரச சார்பு ஊடகங்களாலும் தமிழ்த்தேசியத்தை சிதைக்க வேண்டும் என செயற்படும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சதிக்கு தெரிந்து போகிறார்களா? இல்லை தெரியாமல் போகிறார்களா ? என தெரியவில்லை. ஆகவே தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்திக்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம்.
உண்மையை சொல்லும் ஊடகங்கள் எனில் நாளை இந்த செய்தியை முன் பக்கத்தில் பிரசுரியுங்கள். முடிந்தால் தவறான செய்திகளை பரப்பியமைக்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் மன்னிப்புக் கோருங்கள்.
உறுத்த வேண்டும் என்பதற்காகவே கூறினேன்
எனது கருத்துக்கள் ஒரு சிலருக்கு உறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கலாம். உறுத்தல்களை ஏற்படுத்திக்கொண்டால் மன வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இருந்தாலும், உறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நான் அவ்வாறு கருத்து தெரிவித்தேன். தெரியாமல் தவறு செய்தால் அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும். எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
குழப்பம்
அத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகளில் நாம் தொடர்ந்தும் அரசியல் பேசுவோம்” எனவும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். தியாக தீபத்தின் நினைவிடத்தில் நேற்று முன்தினம் தியாக தீபத்தின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் குழப்பங்களை ஏற்படுத்தி , முரண்பாடுகளை வளர்த்தார்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளி வந்த நிலையிலையே நேற்றைய தினம் கட்சி அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.