சிறிலங்காவில் அதிகரிக்கும் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை
சிறிலங்காவில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக சூழ்நிலைகள் காரணமாக சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பப்படுவதாக அதிகார சபையின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல்
இதேவேளை சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோத செயலாக கருதப்பட்டாலும் , அது தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமின்றி வேலைக்கு அனுப்பபடுவதாக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக் கல்வி பாதிக்கப்படல்
இதனால் எதிர்காலத்தில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் கல்வி இடைநிறுத்தப்படுவது அதிகரிக்கப்படலாமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் வியாபாரிகளை இனங்காண மற்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது மக்கள் உதவ வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது பாரிய குற்றமெனவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் பொருளாதார நெருக்கடிகளை காரணங்காட்டி பெற்றோர் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப கூடாதெனவும் அவ்வாறாக நடைபெறும் பட்சத்தில் சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுமெனவும் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.