மகஜர் கையளித்தும் தீர்வு இல்லை- கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் தொடர் போராட்டம்!
மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மன்னார், நானாட்டான், மடு, முசலி, மாந்தை மேற்கு பகுதிகளை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் காலை 8.30 தொடக்கம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
25 வருடங்களுக்கு மேலாக முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற நிலையில் இதுவரை தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் முன்பள்ளிகளில் பல தரப்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்கு தங்களை பயன்படுத்துகின்ற போதும் தங்களுக்கு மாதம் வெறுமனே ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுவதாக சுட்டிகாட்டியுள்ளனர்.
அரச தலைவர், வடக்கு ஆளுநர் மற்றும் சம்மந்தப்பட உயர் அதிகாரிகளுக்கு தங்கள் கோரிக்கைகளை மகஜராகவும், நேரில் சந்தித்தும் தெரிவித்துள்ள போதும் தங்களுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும், 6000 ரூபா ஊக்குவிப்பு தொகை இன்று போதுமானதா? நிரந்தர நியமனம் வேண்டும், முன்பள்ளி கல்வி முக்கியம், முன்பள்ளி ஆசிரியர்கள் முக்கியம் இல்லையா போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
மேலும் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒந்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெலிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.











