காணாமல் போன இளைஞன் சடலமாக - சி.சி.ரிவி காட்சியில் வெளியான உண்மை!
நுவரெலியாவில் காணாமல் போயிருந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய சுந்தரலிங்கம் சசிதரன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 3 ஆம் திகதி வீட்டிற்கு விறகு தேடி வருவதாக கூறிவிட்டு சென்ற இளைஞன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை என உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன்
இந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், தேடுதல் பணியிலும் ஈடுப்பட்டிருந்தனர்.
இதன் போது, விறகு தேடி சென்ற பகுதியில் ஆற்றை கடக்க முற்பட்டபோது, கால் தவறி ஆற்றில் விழுந்து, நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வி காட்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விசேட குழு நியமனம்
நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின், சடலம் நுவரெலியா சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.


