ஏக்கிய இராச்சிய சிந்தனையில் தன்னை ஒரு சிங்கள இனவாத தலைவராக காட்டிய சஜித்!
ஏக்கிய இராச்சிய சிந்தனையில், சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேசியிருந்தமை தாயக மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்றைய தினம் சென்ற எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடகிழக்கு தமிழர்களின் தீர்வு குறித்து எதுவுமே பேசாது அவர் செய்த அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மட்டுமே பேசியது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா அதிபர் வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறி வரும் நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஏக்கிய இராச்சியத்திற்குள் தான் அமைய வேண்டும் என்பது போன்று கூறிய சஜித் பிரேமதாச, தன்னை ஒரு சிங்கள இனவாத தலைவராக காட்டியுள்ளார் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் தீர்வு குறித்து பேசாத சஜித்
அதுமட்டுமன்றி நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்றிருந்த சஜித், மக்களுக்கு தான் செய்த அபிவிருத்தி திட்டங்களை மட்டுமே முதன்மைப்படுத்தி கூறியுள்ளார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்ப முயன்ற போது, நான் அனைத்தையும் மேடையில் கூறியுள்ளேன் அதனை கேளுங்கள் எனக் கூறிவிட்டு நழுவிச் சென்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிகார பகிர்வை விரும்பாதவர்கள்
சிறிலங்கா அரச தலைவர்களை பொறுத்தவரை அது மகிந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் சரி எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவாக இருந்தாலும் சரி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அதிகாரத்தை பகிர்ந்தளிக்க விரும்பாதவர்கள் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வரும் போது ஒருவர் தீர்வை கொண்டுவந்தால் மற்றவர்கள் அதனை எதிர்ப்பார்கள். இது அவர்களது திட்டமிட்ட அரசியல் நிகழ்சி நிரல். இது புரியாமல் பல தமிழர்கள் அவர்களுக்கு பின்னால் தங்களது சுய இலாபங்களுக்காக அலைந்து திரிவதோடு தமிழ் மக்களையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் அடகு வைக்க முயற்சி செய்கின்றனர் எனவும் அரசியல் ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

