மந்த போசனை சமுகம் உருவாகும் ஆபத்து - நாடாளுமன்றில் எச்சரிக்கை!
இலங்கையில், இம்மாத நிறைவில் உணவுப் பணவீக்கம் 100% வரை அதிகரிக்கக்கூடும். எனவே எதிர்காலத்தில், மந்த போசனைமிக்கதொரு சமூகம் உருவாகும் ஆபத்து உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரசிங்க முன்வைத்த இடைக்கால பாதீட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் போசனை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஐவர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு நேர பகலுணவுக்கான செலவு 2019 இல் 1100 ரூபாவாக காணப்பட்டது. 2022 இல் அது 2300 ரூபாவை விடவும் அதிகரித்துள்ளது.
போசாக்கு நிலையில் இலங்கையின் தரப்படுத்தல் நிலை
ஆரம்பப்பிரிவைச் சேர்ந்த 11 இலட்சம் மாணவர்களுக்கு பகலுணவு வழங்கப்பட்டது. இன்று அதனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உணவு வழங்கல் திட்டத்துக்காக மாணவரொருக்காக தலா 60 ரூபாவே ஒதுக்கப்படுகிறது.
இன்று அந்த விலைக்கு ஒரு முட்டையை மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும். 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் மந்த போசனை நிலைமை தொடர்பான உலக தரப்படுத்தலில் 6 ஆவது இடத்திலும், தெற்காசிய தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திலும் இலங்கை உள்ளதாக அண்மையில் யுனிசெப் தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் அரசாங்கம் உரிய வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். சிறுவர்களில் 5 வயதுக்கு குறைந்தவர்களே அதிகளவில் மந்த போசனை நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் தோட்ட மக்கள் நிர்க்கதி
இதேவேளை இலங்கை சனத்தொகையில் 49 இலட்சம் பேர் தமக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் எனவும், வெட் வரி மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, கர்ப்பிணி பெண்களுக்கு திரிபோஷா இல்லை. கோதுமை மா விலை அதிகரிப்பினால் பெருந்தோட்ட மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர்.
எனவே, உணவை பாதுகாத்து அதனை பகிர்ந்தளிப்பதற்கான சிறந்த முறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.