சிவில் உடையில் அட்டூழியம் செய்த காவல்துறையினர்: தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
சிவில் உடையில் இருந்த ஈச்சிலம்பற்று காவல்துறையினரால் வெருகல் முருகன் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவர்கள் உள்ளாடை களையப்பட்டு சோதனையிடப்பட்டதுடன் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது
இச்சம்பவம் நேற்று(02.09.2023) அன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற வெருகலம்பதியான் முருகன் ஆலயத்தில் வருடார்ந்த திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் மாவடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த மாவடிச்சேனை பாடசாலையில் 09, 10, 11 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்று வரும் மாணவர்கள் 08 பேர் கோயில் திருவிழாவிற்கு சென்று 02.09.2023 நள்ளிரவு 02:30 மணியளவில் தமது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
திருப்பி அனுப்பப்பட்ட பெற்றோர்கள்
இதன்போது சிவில் உடையில் நின்ற ஈச்சிலம்பற்று காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மாணவர்களை வீதியில் வைத்து தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது ஒரு மாணவனின் காற்சட்டை மற்றும் உள்ளாடைகளை நீக்கி சோதனையிட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்களின் கன்னங்களில் அறைந்தும் துரத்தி விட்டுள்ளனர்.
இது தொடர்பாக இன்று (02) மாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஈச்சிலம்பற்று காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற போது மாணவர்களை தாக்கிய காவல்துறை அதிகாரி விடுமுறையில் சென்றுள்ளதால் இன்று (03.09.2023) காலை காவல் நிலையம் வரும்படி காவல் நிலையப் பொறுப்பதிகாரி திருப்பி அனுப்பியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)