கோட்டாபயவின் இலங்கை வருகை: அரசியல் பிரவேசத்திற்கும் ஆதரவு.! எச்சரிக்கும் ரணில்
கோட்டாபய ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் அரசியல் பதற்ற நிலை மேலும் அதிகரிக்கும் எனவும் நாடு திரும்புவதற்கு இது தகுந்த தருணம் இல்லை எனவும் அதிபர் ரணில் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும் கோட்டாபய மீண்டும் அரசியலில் ஈடுபட விரும்பினால் எந்த தயக்கமும் இன்றி பொதுஜன பெரமுன அவரை ஏற்றுக்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் சகார கரியவம்சம் தெரிவித்துள்ளமையும், அவருக்கு அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டமையும் கோட்டாபயவின் வருகையை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் கோட்டாபய
இந் நிலையில் நீடிக்கப்பட்ட 14 நாட்கள் முடிவடையும் தருணத்தில் கோட்டாபய சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தனது மனைவியுடன் அமெரிக்கா செல்வதற்கு விடுத்த கோரிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நிராகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவின் வருகையை கண்டித்து சிங்கப்பூரில் இடம்பெறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவும், அவரை சிங்கப்பூரில் வைத்து கைது செய்ய வேண்டும் என மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வருவதனாலும் சிங்கப்பூர் அரசிற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோட்டாபயவை மேலும் சிங்கப்பூரில் தங்க அரசு அனுமதி வழங்காது என நம்பப்படுகின்றது.
இந் நிலையில் 11ம் திகதி சிங்கப்பூரின் பயண அனுமதிச் சீட்டு முடிவடையும் தருணத்தில் மீண்டும் நாடு திரும்புவார் என அறிய முடிகிறது.
கோட்டாபயவுடன் தொடர்பில் உள்ள ரணில்
இந் நிலையில், தான் இன்னும் கோட்டாபயவுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் நாடு திரும்புவது தொடர்பில் தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் ரணில் தெரிவித்தமையானது, கோட்டாபயவின் வருகையால் பதற்ற நிலை அதிகரிக்கும் என அறிந்திருந்து அவரை பாதுகாப்பாக இலங்கை அழைத்துவரும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என்பது புலனாகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட பாரிய கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான பரவலான மக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு சென்ற கோட்டாபய அங்கும் நிலவிய கடும் எதிர்ப்பு காரணமாக ஜூலை 14 அன்று, மாலைதீவில் இருந்து விமானத்தில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசு கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் பயண அனுமதிச் சீட்டு வழங்கியிருந்தது.
வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு முடிவடையும் தருணத்தில், மேலும் 14 நாட்களுக்கு பயண அனுமதிச் சீட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றங்கள்
இந் நிலையில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பி மீண்டும் அரசியலில் ஈடுபட விரும்பினால் எந்த தயக்கமும் இன்றி பொதுஜன பெரமுன அவரை ஏற்றுக்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் சகார கரியவம்சம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரஜை என்ற காரணத்தினால், கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டுக்குள் வர உரிமையும் இயலுமையும் உள்ளது, அவர் இலங்கைக்கு வருவார் என நம்புகிறோம். கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன ஊடாக அரசியலில் ஈடுபட விரும்பினால், அவரை வரவேற்க தயாராக இருப்பதாகவும் காரியவசம் கூறியுள்ளார்.
இதன் காரணமாக எதிர் வரும் காலங்களில் தென்னிலங்கை அரசியலில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இலங்கையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறி வருகின்றனர்.
எவ்வாறெனினும் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவது குறித்து அரசாங்கம் இதுவரையில் எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
