சிறிலங்காவின் அதிபர் செயலகத்திற்குள் முதன் முதலாக நுழைந்த நபர் கைது!
கோட்ட கோ கம அரச எதிர்ப்பு போராட்டத்தின் போது அதிபர் செயலகத்திற்குள் முதன் முதலாக அத்துமீறி நுழைந்த நபரை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு போராட்டத்தின் போது கோட்டையில் அமைந்துள்ள அதிபர் செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தியோகத்தரை அச்சுறுத்திய நபர்
கைது செய்யப்பட்ட நபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்றும், அவரை பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த நபர் போராட்டத்தின் போது கத்தியை கொண்டு பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளார் என்றும் அதன் பின்னரே போராட்டகாரர்கள் செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
