அரசியல் வங்குரோத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி..!
பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் போது இந்த உலகமே இருண்டு விடுவது போல நினைத்துக்கொள்ளுமாம் அதேபோல அண்மைக்காலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் வாதிகளின் பூனை நினைப்பு அரசியல் நகர்த்தப்படும் காட்சிகளும் வெளிப்படையாகின்றன.
குறிப்பாக அந்த கட்சியில் உள்ள சட்டவாளர்களின் சட்டாம்பிள்ளைத்தனங்கள் மலினமான ஒரு திசைக்கு இந்த அரசியலை நகர்த்தி செல்ல தலைப்படுகின்றது.
போராட்டங்களின் போது "லோயர்ஸ் வி ஆர் லோயர்ஸ்" என சிறிலங்கா காவல்துறைக்கு மேலங்கியின் கழுத்துப்பட்டியை தூக்கிகாட்டி அதிகாரம் செய்யும் சட்டவாளர் தலைமுதல் சில சட்டவாளர்களின் சட்டாம் பிள்ளைத்தன கருத்துக்களும் நகர்வுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
தமிழர் தாயகத்தில் கையறு நிலையில் உள்ள முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி செய்வதை விமர்சிக்கும் சட்டாம்பிள்ளைகள் கூட இப்போது வந்துவிட்டார்கள்.
ஆனால் அவ்வாறான சட்டாம்பிள்ளைதனம் செய்யும் அதே அரசியல் அணி பொதுமக்களின் திரள் நிலையை திரட்ட முடியாமல் வெறும் பத்து பதினைந்து பேருடன் போராட்டங்களை நடத்தி தமது அரசியல் பலவீன நிலையை வெளிக்கொண்டு வருவதையும் மறுக்க முடியாது.
அந்தவகையில், சிறிலங்காவில் இன்று கடைப்பிடிக்கபடும் பொசன் நிகழ்வை மையப்படுத்தி வலிகாமம் தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்னொரு கட்ட போராட்டத்தை ஆரம்பித்து விட்டது.
ஆனால் அவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் மக்களின் பிரசன்னம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு கூட இல்லை, வெறுமனே 25க்கும் உட்பட்ட கட்சி உறுப்பினர்களுடன் இந்த போராட்டத்தை முன்னணி நடத்துகின்றது.
இது வெறுமனவே அவர்களின் தன்னகங்கார முனைப்பு கொண்ட ஒரு போராட்டம் என்பதால் இந்த போராட்டத்தில் தாம் இணைந்து கொள்ள முடியாத நிலை இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் உட்பட மக்களை திரள் நிலையில் திரட்ட கூடிய தரப்புக்கள் இந்த போராட்டத்தில் இருந்து ஒதுங்கியே உள்ளார்கள்.
"லோயர்ஸ் லோயர்ஸ்" என மேலங்கி கழுத்துப் பட்டியை தூக்கி காட்டி அதிகராம் செய்யும் சட்டத்தரணிகள் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தையிட்டி விகாரை விடையத்தை இதுவரை சட்டரீதியாக முன் நகர்த்திய தூரம் எவ்வளவு என ஒரு வினாவை தொடுத்து கொண்டால் அதற்குரிய பதில் நிச்சயமாக சாதகமாக வராது என்பதும் வெளிப்படையானதே.
ஆனால் மறுபுறத்தில் முக்கியமான அரசியல் பிரச்சனைகளை வெறும் அரசியல் பகட்டாரமாக செய்ய முனையும் அந்த தரப்பு ஏனைய தமிழ் தேசிய தரப்புக்களுடன் ஒத்துழைத்தும் செயற்படுவதில்லை. மாறாக எம் வழி தனி வழி என காட்சிப்படுத்தலை செய்யப்போய் அதிலும் சொதப்பிக் கொள்கிறது.
இதற்கு மறுதலையாக முன்னாள் போராளி குடும்பங்களுக்கு உதவி செய்வதை விமர்சிக்கும் அளவுக்கும் இறங்கி அதற்க்கு மேலாக சென்று ஊடகங்களையும் வசைபாடும் வகையில் தேவையற்ற ஆணிகளை அது பிடுங்கி கொள்ள தலைப்படுகிறது.
