எந்த அதிகாரத்தின் கீழ் ரணிலை ஆதரித்தீர்கள்! மகிந்த தரப்புக்குள் வெடித்தது பூகம்பம்
எந்த அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த வாரம் நாடாளுமன்றில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக சாகர காரியவசம் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், குறித்த தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதமொன்றை அனுப்பி ஜீ.எல்.பீரிஸ் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, எந்த அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது?, இந்த முடிவை எடுப்பதில் பங்கேற்றதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்கள்?, குறித்த நபர்கள் இவ்வாறு தீர்மானித்தமைக்கான அடிப்படை என்ன?, கூட்டம் நடந்ததாக கூறப்படும் இடம், திகதி மற்றும் நேரம்?,இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அறிவிப்பு தொடர்பான விவரங்கள்? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் குறித்த கடிதத்தில் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி சார்பாக டலஸும் போட்டியில்
பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அதிபர் தேர்தலில் போட்டியிடபோவதாக அறிவித்தார்.
கட்சியின் வேட்பாளரான டலஸ் அழகப்பெரும, அதிபர் நிலைக்கு பொருத்தமானவர் என்ற நிலையில், ஏன் வெளியக வேட்பாளரான ரணில் விக்ரமசிங்வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பீரிஸ் நேற்றைய தினம் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
