மரத்துப்போன அரசியல் தலைவர் ரணில் - எந்த நேரத்திலும் நாங்கள் தயார்!
முழு நாடும் கடுமையான பொருளாதார அனர்த்தத்தை எதிர்நோக்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எவ்வித திட்டங்களும் இன்றி நாட்டை நிர்வகித்து வருகிறது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுராதபுரத்தில் தேசிய மக்கள் சக்தி ஒழுங்கு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்
முழு நாடும் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்கி வருகிறது. அரசாங்கத்திடம் எந்த திட்டங்களோ தீர்வுகளோ இருப்பதாக தெரியவில்லை. கோட்டாபயவுக்கு எப்படி முடியாது. அவரிடம் இருக்கும் ஒருவர் காலையில் என்னை தொடர்புக்கொண்டார்.
வேறு ஒருவர் இருந்திருந்தால், நாடு இதனை விட மோசமாக இருக்கும் தான் இருப்பதால், இந்தளவுக்காவது நாடு இருக்கின்றது என கோட்டாபய நினைப்பதாக அவர் கூறினார்.
ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் மரத்து போன தலைவர்கள். சர்வதேச நாணய நிதியம் வந்து எம்மை மீட்கும், உலக வங்கி வந்து எம்மை மீட்கும் என நினைக்கின்றனர். எனினும் அப்படி நடக்காது.
ஒரு நாடு வீழ்ச்சியடைந்தால், அந்த நாட்டை நாட்டு மக்களே மீட்டெடுக்க வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் உதவியை மேலதிகமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது எரிசக்தி அமைச்சர் ஒருவர் இருக்கின்றார், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இல்லை. கமத்தொழில் அமைச்சர் இருக்கின்றார், வயலுக்கு உரங்கள் இல்லை. கல்வியமைச்சர் இருக்கின்றார், பாடசாலைகளை மூடுவதாக கூறுகிறார். எதற்காக இந்த அமைச்சர்கள்.
தற்போதைய அரசாங்கத்தினால், இந்த நாட்டை மீட்டெடுக்க முடியாது. நாட்டை மீட்டெடுக்க நாங்கள் தயார். கோட்டாபயவும் ரணிலும் நாட்டை ஒப்படைத்தால், நாங்கள் பொறுப்பேற்கவும் தயாராக இருக்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பவும் தயார்.
எமக்கு அரசாங்கத்தை வழங்கி, நாடாளுமன்றத்தில் நாங்கள் விரும்பிய அமைச்சரவையை அமைக்க சந்தர்ப்பத்தை வழங்கினால், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை தடுக்கவும் செயல் திட்டத்திற்கு செல்ல எங்களால் முடியும் என அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரச தலைவர் மற்றும் பிரதமர் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்தால், நாட்டை கட்டியெழுப்ப இருக்கும் கட்சி என்ற வகையில் எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தள்ளார்.
