சடுதியாக குறைக்கப்பட்ட மின்வெட்டு நேரம்..! வெளியான அறிவிப்பு
வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்தவகையில், இன்று 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, இதுவரை காலமும் 2 மணிநேரம் 20 நிமிடங்கள் என நடைமுறைப்பட்டு வந்த மின்வெட்டு நேரம் இம்முறை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்வெட்டு
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் டுவிட்டர் பதிவு
இதேவேளை, வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடைக்கான நேரத்தை குறைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று வெளியிட்டிருந்த வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணையிலும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளமையினால் வார இறுதி நாட்களில் மின்விநியோகத்தடைக்கான நேரத்தினை குறைக்கமுடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறித்த டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
