ரணிலின் போலி பிரசாரம் - ஒரு டொலரைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இலங்கையை மீட்க முடியுமென போலியான பிரசாரங்களை அரசாங்கம் செய்வதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தில் எந்த விதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தேர்தலே தீர்வு எனவும், சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இந்த அரசாங்கத்தாலும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவாலும் மீட்க முடியுமென போலியான பிரசாரங்களை அரசாங்கம் செய்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியம்

குறிப்பாக ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாடுகள், தலைவர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து கடன் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூறுகிறார்கள்.
இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடந்துள்ளபோதிலும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒரு டொலரைக்கூட அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
17 தடவைகள் ஐ.எம்.எப் இலங்கைக்கு உதவியுள்ள போதிலும் இம்முறை ஒரு டொலரைக்கூட இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.எம்.எப் பணிப்பாளர் சபைக் கூட்டம் வொசிங்டனில் நடைபெறும், அதன் பின்னர் கடன் உதவி டிசெம்பரில் கிடைக்கும் என கூறினார்கள்.
பொருளாதார நெருக்கடி

ஆனால் வொசிங்டனில் நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் கூட இலங்கை உள்வாங்கப்படவில்லை. கடன் வழங்கியவர்களிடம் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் அதனை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மறுத்திருக்கிறார்.
கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாகவும் ஆளுநர் கூறினார். பொருளாதார நெருக்கடிக்கு முதலில் தீர்வை வழங்கிவிட்டு பின்னர் தேர்தலுக்கு செல்வோம், இப்போது தேர்தல் நடத்துவது அநாவசியமானது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகிறார்.
இது தவறான கருத்து. தேர்தலை நடத்தாது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காண முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதும், தேர்தல் நடத்துவதும் இருவேறு செயற்பாடுகள் என்றாலும் இரண்டையும் ஒன்றாக செய்ய வேண்டும். ஒன்றை விட்டு இன்னொன்றை செய்ய முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.
ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்