துப்பாக்கி முனையில் படுகொலை செய்யப்பட்டமையை பேனா முனையால் சர்வதேசத்திற்கு கூறினோம்!
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் முன்னால் ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகவியலாளர்களால் கோஷங்கள் எழுப்பட்டன.
இந்த போராட்டத்தின் போது மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனேயே அலைந்தோம், ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தபடுத்தப்பட வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி என்ன?

அதுமட்டுமன்றி, ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட இந்த அரசு தயங்குகின்றது.
பயங்கவாத சட்டம் என்பது, மூன்று தசாப்த காலம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இருந்தது. இப்பொழுது அந்த சட்டத்தை மீண்டும் புதிய வடிவில் கொண்டுவர முயல்கிறார்கள்.
இந்த சட்டத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட பொழுது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம்.
இந்த அட்டூழியங்களை பேனா கொண்டு தான் சர்வதேசத்திற்கு சொன்னோம். எங்களை சுடுகின்றார்கள் எங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த நாட்டில் வசிக்க எமக்கு உரிமை இருக்கிறது.
சர்வதேச விசாரணை வேண்டும்

நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை இந்த நாட்டிலே வாழுகின்ற மக்கள் கேட்கின்ற அதே விடயங்களை தான் நாமும் கேட்கின்றோம். நாங்கள் புதிதாக எதனையும் கேட்கவில்லை.
எமது சக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? பேனா தூக்கிய அனைத்து ஊடகவியலாளர்களும் உயிர் இருக்கும் வரை கூறிக்கொண்டே இருப்போம் சுடப்பட்டது அநீதி.
சுடப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும், நீதி வேண்டும், சர்வதேசம் இதனை பார்க்க வேண்டும், சர்வதேசம் சர்வதேசம் என்று நாங்கள் சொல்கின்றோம்.
உலகில் சின்ன நிலப்பரப்பாக இருக்கும் இங்கு, இடம்பெறும் விடயங்கள் பெரிதாக பேசப்படுகின்றனவே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. விலை பேசும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் தம்முடைய தேவைக்காக இலங்கையை பயன்படுத்துகின்றன.
சிறுபான்மையினரை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டிகொண்டே இருப்போம். படுகொலை செய்யப்பட்ட எங்கள் ஊடகவியலாளர்களின் பாதையில் நாமும் பயணிப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.





சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்