மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறுகிறாரா மகிந்த - உண்மையை வெளிப்படுத்திய சாகர!
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரவில்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னெடுக்கப்படவில்லை என இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையில் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வதந்திகள்
எந்தவொரு அடிப்படையும் இல்லாது இந்த செய்தி சமூக ஊடகங்களில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க முடியாது இருக்கும் தரப்பினரால் இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இவை பொய்யான செய்திகள். சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மக்களுக்காக பதவியேற்கவும் மக்களுக்காக பதவி விலகவும் தயாரான ஒரு நபர்.
ஆளுநர்கள் பதவி நீக்கம்
அவ்வாறான ஒருவர் இரகசியமான முறையில் இராணுவத்தினரின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கத்தில் எந்த பதவியும் ஏற்கமாட்டார். மகிந்த ராஜபக்சவை மீண்டும் சிறிலங்கா அரசாங்கத்தின் உறுப்பினராக்க நாம் தீரமானித்தால் அது மக்கள் ஆணையுடனும், அவர்களது ஆசீர்வாதத்துடனும் நடைபெறும்.
இலங்கையின் அரசியலமைப்பின் படி, மாகாண ஆளுநர்களை நியமிக்கும் பொறுப்பு சிறிலங்கா அதிபருக்கு உள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தாலும், ஆளுநர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
