இலங்கையில் மீண்டும் ஆரம்பமானது பன்றி இறைச்சி விற்பனை
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பின்னர் இலங்கையில் விலங்குகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பன்றி இறைச்சி விற்பனையை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதியளித்துள்ளனர்.
மேல் மாகாணத்திற்கான கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர் டாக்டர் ஜி.ஏ.டி நந்தசிறி கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்தார்.
ஒக்டோபர் மாத பிற்பகுதியில், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகளை கொண்டு செல்லுதல், கொலை செய்தல் மற்றும் விற்பனையைத் தடைசெய்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
சமைக்கப்பட்ட இறைச்சியை உட்கொள்வது பாதுகாப்பானது
"ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது, மேலும் நன்கு சமைக்கப்பட்ட இறைச்சியை உட்கொள்வது பாதுகாப்பானது. முதற்கட்ட நடவடிக்கையாக, தற்போதுள்ள பன்றி இறைச்சி இருப்புகளை ஆய்வு செய்து, அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கிறோம். இதற்கான நடவடிக்கை நாடு முழுவதும் நடந்து வருகிறது,'' என்றார்.
மேலும் அங்குள்ள பன்றிகளுக்கு நோய் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் இறைச்சி கூடங்களை ஆய்வு செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலால் ஆபத்தா..!
"ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படாத இனப்பெருக்கப் பண்ணைகளை நாங்கள் கண்டறிந்து கண்காணித்து வருகிறோம், விரைவில் இந்தப் பண்ணைகளில் இருந்து மற்றவர்களுக்கு பன்றிக்குட்டிகளை விநியோகிக்கத் தொடங்குவோம் என நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
“இரண்டு மாதங்களில் தொழில்துறையை புத்துயிர் பெறச் செய்யலாம்,” என்றார்டாக்டர். நந்தசிறி, ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், இதுபோன்ற வெளிநாட்டு நோய்கள் வருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளது என்றும் பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |