நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு காரணம் இவர்களே - சாட்சியங்களுடன் வெளியிட தயார்!
நாட்டில் கடந்த மே 9 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை நடந்த வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக உடனடியாக அதிபர் ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“அதிபர் ஆணைக்குழு நியமிக்கப்படுமாயின் வன்முறைகளுக்கு பொறுப்பானர்கள் தொடர்பில் சாட்சியங்களுடன் தகவல்களை வழங்க தயார்.
அதிபர் ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்க கோரிக்கை
வன்முறைகள் ஏற்பட காரணம், அவற்றின் பின்னணியில் இருந்தது யார் என்பதை கண்டறிய உடனடியாக அதிபர் ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாங்கள் அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்லும் சூழ்ச்சிகளை நாட்டிற்குள்ளும், நாட்டுக்கு வெளியிலும் உள்ள சக்திகள் மாத்திரமன்றி, அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கின்ற சக்திகளும் மேற்கொண்டன என்பது மிகவும் தெளிவானது.
ஊழல், மோசடிகள், கவனமின்மையே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு காரணம்
ஊழல், மோசடிகள், கவனமின்மை மற்றும் வேண்டும் என்றே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்பன மக்கள் தற்போது எதிர்நோக்கும் கஷ்டங்களுக்கு காரணம்.
அதிபர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டால், தவறான முடிவுகளை எடுத்து நாட்டை இந்த நிலைமைக்கு தள்ளியவர்கள், கவனமின்றி தவறான முடிவுகளை எடுத்தவர்கள் யார்? என்பதை சாட்சியங்களுடன் வெளியிட தயாராக இருக்கின்றேன்” எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

