சிறிலங்காவில் இரு தேச நிலைப்பாடு - தமிழர் தேசம் விடுத்துள்ள செய்தி
இரத்தக்கறை படிந்த சிறிலங்காவின் சுதந்திர நாளை, கரி நாளாக தமிழர்கள் எப்போதும் பார்ப்பது சிறிலங்காவில் இரு தேசங்கள் என்ற நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் சுதந்திர நாள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“சிறிலங்கா தனது சுதந்திர நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் நாளில் நாட்டின் முழு அமைதி என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பரிகார நீதியில் தங்கியுள்ளது.
தமிழர்களது உரிமை பறிக்கப்பட்டு சிங்கள பேரினவாதத்திடம் கையளிக்கப்பட்ட நாளாகவே இந்த நாள் இருக்கின்றது.
நாடு முழுவதுமே சிங்களவர்களுக்கு, என்ற நிலைப்பாட்டில் இறுகிப்போயுள்ள பௌத்த பேரினவாதம், அந்த நாள் முதல் தமிழர்களை இன அழிப்புக்கு உள்ளாக்கி வருவதோடு தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்து தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்தும் வருகின்றது.
இத்தகையதொரு சூழலில் தமிழர்கள் தமது நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடி வருகின்றமையோடு சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாகவே கருதுகின்றனர்.
இன அழிப்புக்கான பரிகாரம் நீதியின் அடிப்படையில் தமிழர் தேசத்தின் அரசியல் அங்கீகரிக்கப்பட்டு, தமிழர்கள் ஒரு தேசிய இனமாக சுதந்திர தேசத்தை சுவாசிப்பதற்கான நாள் கிட்டாதவரை, சிறிலங்காவில் முழு அமைதி என்பது இல்லை என்பதே சிறிலங்காவின் சுதந்திர நாளில் - சிங்கள தேசத்திற்கு தமிழர் தேசம் விடுகின்ற செய்தியாக இருக்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
