தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவிந்த இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள்
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் கூடும் கிழக்குக் கடலோர(அறுகம்குடா) சுற்றுலா மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருந்தபோதிலும் நவம்பர் 1 முதல் 52 நாட்களில் இஸ்ரேலில் இருந்து 2,234 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் 31 இறுதியில் 21,913 ஆக இருந்த இஸ்ரேல்(israel) சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை டிசம்பர் 22 நிலவரப்படி 24,147 ஆக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய வாராந்திர சுற்றுலாத் தரவுகள் தெரிவித்துள்ளன.கடந்த ஆண்டு 19,517 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
கொழும்பில்(colombo) உள்ள அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளை இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள அறுகம் குடாவில்(arugam bay) தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதால் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரித்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கு(sri lanka) அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அறுகம் குடா உள்ளிட்ட கடலோர சுற்றுலாப் பகுதிகளை விட்டு வெளியேறவும், ஆடைகளில் ஹீப்ரு மொழியை வெளிப்படையாகக் காட்டுவதை நிறுத்தவும், ஒக்டோபர் 23 அன்று இஸ்ரேல் தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டது.
குறைந்தது மூன்று வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் அறுகம் குடாவில் சாத்தியமான தாக்குதல் குறித்து எச்சரித்த பின்னர் ஏழு நாடுகள் - அமெரிக்கா(us), இஸ்ரேல்(israel), ரஷ்யா(russia), கனடா(canada), இங்கிலாந்து(uk), நியூசிலாந்து(new zealand) மற்றும் அவுஸ்திரேலியா(australia) தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண ஆலோசனைகளை வழங்கின.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கடுமையான பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பயண ஆலோசனைகள் பின்னர் அகற்றப்பட்டன.
உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
தாக்குதல் வதந்தியின் பின்னர் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.
மாலைதீவு(maldives) பிரஜை உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிரவாத சதி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.48 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 29 சதவீதத்தை இந்த ஏழு நாடுகளும் பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 1.97 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது கடந்த வருடத்தின் மொத்த வருகையான 1,487,303 ஐ விட அதிகமாகும் என தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதி வரை இந்தியாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் 20 சதவீதமும், அடுத்தபடியாக ரஷ்யாவிலிருந்து 9.6 சதவீதம் பேரும் வந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |