இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை! ஒப்பந்தத்தை எதிர்க்கும் விமல் வீரவன்ச
இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுப்பதை எதிர்ப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையில் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனால் இலங்கை பிரஜைகள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தரப்பினராக அடையாளப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுக்க வேரகல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் வளங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "பொருளாதார மற்றும் சமூக பாதிப்பை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
இந்தியாவின் செல்வந்தரான அதானிக்கு இலங்கையின் பெரும்பாலான வளங்களை வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் பங்குகளை அதானி நிறுவனத்துக்கு வழங்குவதால் நடுத்தர மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் டெலிகொம் நிறுவனத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
அதேபோல் இலங்கை மின்சாரத்தை பல கூறுகளாக பிரித்து அதனையும் இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எட்கா ஒப்பந்தம்
இலங்கையின் பொருளாதார கேந்திர மையங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும்.
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் சுதந்திரமாக தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தர பிரஜைகளாக கருதப்படுவார்கள். இலங்கை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றமடையும்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்படும் ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |