விடுதலைப்புலிகளுடனான யுத்தம் தொடர்பில் பசிலின் சர்ச்சையான கருத்து - சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது கருப்பு பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் பசில் வெளியிட்ட கருத்திற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மறுப்புச் செய்தியை சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான செய்தி வெளியானதையடுத்தே வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் நிதியமைச்சருடன் இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என்றும் இதன்போது நிதியமைச்சர் தான் தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது கருப்புச் சந்தையிலிருந்து பணம் பெற்று ஆயுதங்கள் கொள்வனவு செய்தமையை சிறிலங்கா அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியிருந்தது.
சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதன் போது கருப்புச் சந்தையில் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
