சட்டவிரோதமாக புலம்பெயரும் இலங்கையர்கள் : நெருக்கடிகள் தொடர்பில் எச்சரித்துள்ள மனுஷ நாணயக்கார!
சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் 1.2 மில்லியன் இலங்கையர்கள் மாத்திரம் முறையாக பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டி மல்வத்து அஸ்கிரிய பீடத்துக்கு விஜயம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
எனினும், சுமார் மூன்று மில்லியன் இலங்கையர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக தற்போது பல்வேறு நாடுகளில் பணியாற்றுதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடக்குமுறை சம்பவங்கள்
வெளிநாடுகளில் பல அடக்குமுறை சம்பவங்களை எதிர்கொள்ளும் பெரும்பான்மையான மக்கள் பதிவு செய்யாமல் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையாக பதிவு செய்துவிட்டு வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு காப்புறுதித் தொகை மற்றும் பல நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பின்பற்றப்படும் தவறான வழிகள்
சிலர் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றாமல் தவறான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்வதாக மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வெளிநாடுகளில் நெருக்கடிகளுக்குள்ளாகும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அமைச்சு பல சிக்கல்களை எதிர்நோக்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |