நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கவிதிகள்: விரைவில் புதிய சட்டமூலம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை குறித்து நாட்டு மக்களிடம் பல விமர்சனங்கள் உள்ளன. இது நியாயமான விமர்சனம்.
நாடாளுமன்ற தரநிலை
கடந்த காலத்தில் அந்த பொறுப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றாததால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். அவற்றில் அமைச்சரவையில் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளோம்.
நாடாளுமன்ற தரநிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் புதிதாக சட்டமூலம் தாக்கல் செய்யப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியின் கௌரவத்தை காக்காத வகையில் செயற்பட்டால் மற்றும் அவர் சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது செய்திருந்தால் சுயாதீனமாக நியமிக்கப்படும் குழு ஊடாக அந்த உறுப்பினருக்கு தண்டனை வழங்கப்படும்.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் வகையில் இந்த சட்டமூலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.