இந்தியா நோக்கி விரையும் ஸ்ரீலங்கா கடற்படை கப்பல்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பிராணவாயுவை கொண்டு செல்வதற்காக ஸ்ரீலங்கா கடற்படை கப்பலான "சக்தி" இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து வாராந்தம் 100 மெட்ரிக் தொன் பிராணவாயுவை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வாரம் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதுடன், தேவை பூர்த்தியாகும் வரை கொள்வனவு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது. இதற்கென ஸ்ரீலங்கா கடற்படை கப்பல் பயன்படுத்தப்படவுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வாவை, எமது கொழும்பு செய்தியாளர் பார்தீபன் சண்முகநாதன் தொடர்பு கொண்டு வினவினார்.
பிராணவாயுவை பெற்றுக்கொள்வதற்கான முறையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா கடற்படை கப்பலான "சக்தி" இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை துறைமுகத்தை சென்றடைய சுமார் 36 மணி நேரம் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சக்தி என்ற கப்பலானது, ஸ்ரீலங்கா கடற்படை வசம் காணப்படும் மிகப்பெரிய கொள்கலன் தாங்கிக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.