இலங்கை மக்கள் இன்னமும் அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள்! தென்னிந்திய இயக்குனர் ஆதங்கம்
இலங்கை மக்கள் இன்னமும் அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். அந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசினுடைய வேலை என தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தைப்பூச தினத்தினை முன்னிட்டு புதிரெடுக்கும் பொங்கல் விழா நிகழ்வு 03.02.2024 அன்று சனசமூக நிலையத்தின் முன்றலில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை அரசின் கடமை
அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சமின்றி சகல மக்களும் சர்வ சுதந்திரமாக, இணக்கமாக வாழ ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுப்பது உலக அரசுகள், உலக மக்கள் மற்றும் இலங்கை அரசின் கடமையாகும்.
எங்கு சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ, எங்கு சுதந்திரம் நிராகரிக்கப்படுகிறதோ அங்கு போராட்டமும் எழுச்சியும் தவிர்க்க முடியாத ஒன்று.
இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். எல்லா மக்களும் சுதந்திரத்தை விரும்புகின்றார்கள். நிச்சயமாக ஒரு நல்ல விடிவு ஏற்படும் என நினைக்கிறேன்.
மக்கள் இப்பொழுது தான் மீண்டு எழுந்து கொண்டு இருக்கிறார்கள். இது நல்ல ஒரு வளர்ச்சியாக இருக்கவேண்டும் என அனைத்து மக்களையும் அரசாங்கத்தையும் கேட்டு கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |