காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை - ரணிலிடம் உரத்த குரலில் பேசிய சம்பந்தன்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாட்டிற்கு வந்து திரும்பியதை அடுத்து அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ''தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைவு தயாராகி வருகின்ற நிலையில் அது நிறைவடைந்தவுடன் காணி அதிகாரங்களை மாகணங்களுக்கு வழங்கப்படும்.
மாகாணங்களுக்கான பிரதிப் காவல் துறை மா அதிபர்களின் எண்ணிக்கையை 10ஆக வரையறுப்பதற்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.
சந்திப்பு
ஒன்பது மாகாணங்களுக்கும் தலா ஒரு பிரதிப் காவல் துறை மா அதிபரும், கொழும்பு மெற்றோபொலிட்டன் பிரிவுக்கு ஒருவருமாக பத்து நியமனங்கள் வரையறுக்கப்படவுள்ளன.
அதன் பின்னர் அவர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் உறுதியளித்தார்.
அதிபர் செயலகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை திடீரென கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அதிபர் சந்திக்க விரும்புகின்றார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமே சந்திப்புக்குச் சென்றிருந்தனர்.
டக்ளஸ் தேவானந்தா
தமிழர் தரப்புடன் அரசு நடத்திவரும் தீர்வு தொடர்பான பேச்சுக்களில் அரசு வாக்குறுதியளித்த விடயங்களை நிறைவேற்ற கூட்டமைப்பு வழங்கிய ஒரு வார காலக்கெடு கடந்த 17ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
எனினும், வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை கொழும்பில் நேற்று நண்பகல் சந்தித்த தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதிபர் செயலகத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
உரத்த குரலில் சம்பந்தன்
குறித்த கூட்டத்தில் சம்பந்தன், ''காணிகளை எப்போது விடுவிப்பீர்கள் என்கிற காலவரையறையைக் கூறுங்கள். அவ்வாறில்லாமல் விடுவிப்போம் விடுவிப்போம் என்று சொல்வதால் பயனில்லை.'' என உரத்த குரலில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, ஏற்கனவே ஐந்து அரசியல் கைதிகளை விடுவிப்பதாக கூறியபோதும் 108 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக இணங்கியபோதும் இன்னமும் எந்த விடயமும் நடைபெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, விடுவிக்கப்படக்கூடிய காணிகளின் விவரங்களை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அமைச்சரவை பத்திரமொன்றின் ஊடாக வெளிப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்று அதிபர் தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை
தொல்பொருளியல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அதிகாரிகளுடன் பேசப்பட்டது. குறிப்பாக குருந்தூர்மலையை ச் சுற்றியுள்ள காணிகளை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
குருந்தூர்மலை, தென்னமரவாடி, திரியாய் போன்ற இடங்களில் தாம் எல்லைக் கற்களை நாட்டியுள்ளபோதும் அவை வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அப்படியென்றால் திணைக்கள அதிகாரிகளே கற்களை உடன் அகற்றிவிடவேண்டும் என்று கோரினோம். அதற்கும் அரச தரப்பினர் இணங்கினார்கள். அதிகாரப்பகிர்வு விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.என சம்மந்தன் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை
இந்த உரையாடலின்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டோம். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது இந்த விடயத்தினை வலியுத்தியதையும் நாம் எடுத்துரைத்தோம்.
பதிலளித்த அதிபர் , ''தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அது நிறைவடைந்தவுடன் காணி அதிகாரங்களை மாகணங்களுக்கு வழங்குவது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.'' என்று தெரிவித்துள்ளார்.
இதேநேரம், உண்மைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெற்று புதிய சட்டத்தினை உருவாக்குதல் உள்ளிட்டவற்றுக்கான சட்ட வரைவுகள் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இணங்கிய விடயங்கள்
அந்த வரைவுகளை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக எம்முடன் கலந்தாலோசிக்குமாறு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதியாக, ஏற்கனவே இணங்கிய விடயங்கள் மற்றும் இன்றைய சந்திப்பில் இணங்கிய விடயங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும், அதனடிப்படையிலேயே அடுத்த கட்டப் பேச்சுக்களை முன்னெடுப்பது பற்றிய தீர்மானங்களை எடுக்க முடியும் என்று அரச தரப்புக்கு தெரிவித்தோம்.'' என தெரிவித்தார் .


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
