எட்கா ஒப்பந்தம்... இலங்கையர்கள் வேலையிழக்கும் அபாயம் : வெளியான தகவல்
இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) கைச்சாத்திடப்பட்டால் பல இலங்கையர்கள் தொழில்வாய்ப்பை இழப்பதுடன் பெறும் சம்பளத்தில் வீழ்ச்சியும் ஏற்படும் அபாயமும் உள்ளதாக மூத்த அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் (India) எட்கா ஒப்பந்தத்தை செய்வதில்லையென்று தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் நேற்றிரவு (21) ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தபோது, இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக எட்கா உடன்படிக்கையை நிறைவேற்றும் முயற்சிகள் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்திருந்தார்.
வெளிவிவகார அமைச்சரின் கருத்து
கடந்த 20ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அரசின் மூத்த அரசியல் பிரமுகர் ஒருவர், “இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் பல இலங்கையர் தொழில்வாய்ப்பை இழப்பதுடன் பெறும் சம்பளத்தில் வீழ்ச்சியும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எட்கா ஒப்பந்தத்தின் ஊடாக இந்திய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரலாம். ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளனதால் முதலீட்டாளர்கள் வழங்கும் சம்பளமும் குறைவாகவே இருக்கும்.
குறைந்த சம்பளத்தில் பணியாற்றுதல்
இதனால் அரசாங்கம் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற இந்தியாவிலிருந்து வேலையாட்களை அழைத்து வருவதற்கான முயற்சி இடம்பெறும். இதனால் இலங்கையில் உள்ளவர்களுக்கு தொழில் பாதுகாப்பின்மை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
அத்துடன் அதனால் ஏற்படும் தாக்கத்தால் இலங்கை அரசியலில் ஸ்திரத்தன்மையின்மை ஏற்படலாம். எனவே எட்கா ஒப்பந்தம் அநுர அரசில் கைச்சாத்திடப்படமாட்டாது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |