புகலிட நாடுகளில் பெருமெடுப்பில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டங்கள்
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடித்துவரும் தமிழ்தேசிய வழமையின்படி இம்முறைவரும் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தில் தாயகத்தைப் போலவே புகலிட நாடுகளிலும் நீதிகோரும் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
பேரணிகள் மற்றும் ஒன்று கூடல் போராட்டங்களுடன் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடிக்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திரள் நிலையுடன் போராட்டங்கள்
1998 ஆம் ஆண்டில் சிறிலங்கா தனது 50 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியபோது புகலிட நாடுகளில் மிகப்பெரிய திரள் நிலையுடன் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்குலகத் தலைநகரங்களில் ஒன்று கூடிய இந்தப் போராட்டங்கள் அன்றைய நாட்களில் மிகப்பெரிய பேசுபொருளை உருவாக்கியிருந்தன.
இப்போது 25 வருடங்கள் கழித்து அதனைவிட மிகப்பெரிய எழுச்சியுடன் இந்தவார இறுதியில் ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் கனடா உட்பட்ட வடஅமெரிக்க நாடுகளிலும் பசுபிக் பிராந்திய நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இந்தப் போராட்டங்களுக்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழினத்தின் கறுப்பு நாள்
அந்தவகையில், தமிழ் மக்களின் இறைமையை புறம்தள்ளி சிறிலங்காவுக்கு சுதந்திரத்தை வழங்கிய பிரித்தானிய தலைநகர் லண்டனில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகலில் சிறிலங்கா தூதரகம் முன்னால் மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது.
“சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கறுப்பு நாள்” எனும் தொனிப்பொருளில் இக்கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல பாரிஸ் உட்பட்ட ஏனைய ஐரோப்பிய நகரங்களிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளது.