மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கான நடவடிக்கை - சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள வேண்டுகோள்
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கான விசாரணை
இலங்கையின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நம்பகத் தன்மை மிக்க உள்நாட்டு பொறிமுறைகள் இல்லாத பட்சத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான ஏனைய சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச நியாயாதிக்கத்தையும் பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச நியாயாதிக்கத்தையும் பயன்படுத்தவேண்டும்
டுவிட்டர் பதிவின் மூலம் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய அலுவலகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது போன்று குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தாக்கல் செய்யுமாறும் அந்த பதிவில் வலிறுத்தப்பட்டுள்ளது.
சாத்தியமான சூழ்நிலைகளில் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்துமாறும் சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயக முறையில் மக்களின் அபிலாஷைகளை பாதுகாக்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும், அனைத்து மக்களின் தேவைகளை பாதுகாக்கும் வகையில் சேவை செய்வதற்கும் அனைத்துக் கட்சிகளும் விரைவாக ஒன்றிணைந்து செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

