சிக்கலில் சிறீதரன் - அரச தரப்பு வழங்கிய உறுதிமொழி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க முன்னிற்பதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு அதிகாரிகள்
கடந்த ஜனவரி 11ஆம் திகதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டுக்குச் சென்ற இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
குறித்த விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் இது தொடர்பில் சிறீதரன் தனது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த, பிமல் ரத்நாயக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம்
அத்தோடு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால் அது எங்கள் இலட்சியமோ கொள்கையோ அல்ல ஆனால் புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை நாட்டின் சட்டங்களை நாங்கள் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால், சட்ட மூலத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும், அத்தோடு சிறீதரனின் வெளிநாட்டுப் பயணத்தை விமான நிலையத்தில் தடுத்தமை தொடர்பில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்கள் பிரதிநிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தடுத்தமை தொடர்பில் அரசாங்கத்தின் வருத்தத்தை தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த தடையானது அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இடம்பெறவில்லை என வலியுறுத்தியுள்ளார்.
உறுப்பினர்களின் சிறப்புரிமை
எனவே, இறுதியாக சிறீதரனுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். ஆனால் இது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பயன்பாடா என்பது தெளிவாகத் தெரியவில்லை அத்தோடு அவரும் அதனை சொல்லவில்லை அவ்வாறு அவர் வரும்போது இவ்வாறான ஒன்றுக்கு அவர் உள்ளாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நிச்சயமாக இது அரசாங்க கொள்கை அல்லது அரசாங்க வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல எவ்வாறாயினும் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்கு தாம் முன்நிற்பதாக பிமல் ரத்நாயக்க உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |