இளைஞர்களின் எதிர்காலத்திற்கான புதிய பொருளாதார அணுகுமுறை - வரவு செலவு திட்டத்தில் அதிபர் ரணில்
சிறிலங்கா நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டினுடைய வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் இன்று சிறிலங்கா நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது.
இதன் முதலாவது கட்டமாக 21ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார்.
பொருளாதார அணுகுமுறை
மேலும், “இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த பொருளாதார முறை உருவாக்கப்படும்.
வறிய மற்றும் பொருளாதார சிக்கல் நிலை கொண்ட குடும்பங்கள் மீது முழு கவனம் செலுத்தப்படும்.
தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படுவதோடு அவர்களின் பணியை திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும்.
நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்த்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அமைவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது” என அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

