ரணில்-ராஜபக்ச அரசாங்கத்தை எச்சரித்த பாட்டலி
இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக ரணில்-ராஜபக்ச அரசாங்கம் பாதுகாப்பு படைகளை கொண்டு நடத்தும் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடருமானால், எதிர்பாராத விளைவுகளை எதிர்நோக்க நேரிடுமென அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதை உறுதி செய்வது சிறிலங்கா அதிபரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கை
அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை அடக்க சிறிலங்கா அரசாங்கமும் பாதுகாப்பு படையும் முயற்சிக்கும் பட்சத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது வன்முறை சம்பவங்கள் பதிவாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் அண்மையில் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், தற்போதைய சிறிலங்காவின் அரசாங்கத்தின் நிலையற்ற தன்மையை வெளிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களால் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சிறிலங்காவின் அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, அவரது பதவியேற்பை தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக பாட்டலி சம்பிக்க ரணவக்க நினைவூட்டியுள்ளார்.
தாக்குதல் முறைகள்
இதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய தாக்குதல் முறைகளை பயன்படுத்த வேண்டாமென தான் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் முறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |