கடன் மறுசீரமைப்பு - வெளிக் கடனாளிகளுக்கு விளக்கமளிக்கவுள்ள இலங்கை
அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து வெளிக் கடனாளிகளுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளதாக உலகளாவிய சட்ட நிறுவனமான கிளிஃபோர்ட் சான்ஸ் அறிவித்துள்ளது.
விளக்கமளிக்கல் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ளது.
அரசாங்கமும் மத்திய வங்கியும் கடன் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு அதன் பொருளாதாரக் கொள்கைகளைத் திருத்தியமைக்கும் அதே வேளையில், இலங்கை சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது.
நிதி நெருக்கடி
ஏப்ரல் மாதம் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதுடன், மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சமாளிக்க பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான சமீபத்திய கலந்துரையாடலின் போது, இலங்கையின் கடன்களை மறுசீரமைக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்கத்தால் முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட கிளிஃபோர்ட் சான்ஸ் மற்றும் லாசார்ட் ஆகிய நிறுவனங்கள் வெளிக் கடனாளிகளுடனான பேச்சுவார்த்தையின் போது இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்கள்.
வெளிக் கடனாளிகளுடன் கலந்துரையாடல்
உலகளாவிய சட்ட நிறுவனமான கிளிஃபோர்ட் சான்ஸ் வெளியிட்ட அறிக்கையில், வெளிக் கடனாளிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.
இதன்படி, கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து வெளிக் கடனாளிகளுக்கு இலங்கை விளக்கமளிக்கவுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.