அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
அகதி வாழ்வெனப்படுவது மரண வதையினாலானது. அது மனிதர்களை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருக்கும் ஒரு வகை யுத்தம். தண்ணீரில் வாழும் மீனை தரையில் எறிந்தால் அது எப்படி துடிதுடிக்குமோ, அப்படித்தான் அகதியின் துடிதுடிப்பும் பூமிப் பந்தெங்கிலும் அகதியாக அலைவுறுகின்ற போதும்கூட தாய்நிலத்தின் பெருங்கனவை கொண்டவர்களாக ஈழத் தமிழினம் இருப்பதன் தவிப்பும் அதனால்தான்.
ஜூன் 20 சர்வதேச அகதிகள் தினம். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயற்றிய தீர்மானத்தின்படி இந்த நாள் பன்னாட்டு அகதிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் அதே நாளை உலக அகதிகள் நாளாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது.
அகதிகள் ஏன் உருவாகுகின்றனர்?
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கம் என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகின்றது. உலகில் அகதிகள் உருவாவதற்கு இனவெறி, அரசியல், மதம், வன்முறை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் முதலியவை அடிப்படைக்காரணிகள் ஆகும்.
அகதிகளின் உரிமைகளை திரும்ப வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. ஆனாலும் ஐ.நா உருவாக்கப்பட்டத்திலிருந்தும், அகதிகளுக்கான ஆணையம் உருவாக்கப்பட்டதிலிருந்தும் அகதிகளின் எண்ணிக்கை பெருகியே வருகின்றது. அகதிகளைப் பற்றி கவலைப்படும் நாடுகள், தமது நாட்டுக்குள்ளேயே அகதிகளை உருவாக்குகின்றனர்.
சிரியா, தெற்கு சூடான், சோமாலியா, நைஜீரியா, காங்கோ, மியன்மார் போன்ற நாடுகளில் இருந்து இன்றும் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். அதைப்போல இலங்கையிலும் போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இடம்பெயர்வு முடிவுக்கு வரவில்லை.
ஆயுதங்களற்ற யுத்தமும் அரசியல் ரீதியான அழுத்தங்களும் மக்களை இடம்பெயரச் செய்கின்றன. அரச படைகளின் அச்சுறுத்தலால் மக்கள் பலவந்தமாக இடம்பெயருகின்ற நிலை இன்றும் தொடர்வாக பன்னாட்டு அமைப்புக்கள் பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளன.
இன்னமும் இலங்கையில் அகதிகள்
இலங்கையில் இன்னமும் இராணுவத்தால் விடுவிக்கப்படாத பல பகுதிகள் உள்ளன. இன்றும் கேப்பாபுலவு பகுதியை விடுவிக்க கோரும் போராட்டத்தை மக்கள் நடாத்துகின்றனர். அதைப்போல யாழ்ப்பாணம் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தால் அகதிகளாக்கப்பட்ட மக்கள் சொந்த நிலத்திலேயே அகதிகளாக உள்ளனர்.
அதைப்போல வட்டுவாகல் பகுதியில் சிறுநிலத்தைக்கூட இராணுவம் மக்களிடம் கொடுக்கவில்லை. வடக்கு கிழக்கில் இராணுவம் மக்களின் காணிகளில் நிலை கொண்டிருக்கிறது என்றால் அங்கே மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்றே அர்த்தம் ஆகும்.
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம், 68.5 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதுடன் அவர்களில் 25.4 மில்லியன் பேர் அகதிகளாக உள்ளதுடன் அவர்களில் அரைவாசிப் பங்கினர் 18க்கும் குறைந்த வயதுடையவர்கள் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் இரண்டு மணித்துளிகளுக்கு ஒருவர் வீதம் இடம்பெயர்வதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராயலம் குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் ஈழ அகதிகள்
உலக அகதிகளின் எண்ணிக்கையில் இலங்கை அகதிகளும் கணிசமான இடத்தைப் பிடிக்கின்றனர். இன்றும் பல சர்வதேச நாடுகளில் அவர்கள் அகதிமுகாங்களில் வாழ்கின்றனர். தமிழ் நாட்டின் பல்வேறு அகதிமுகாங்களிலும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். தமிழகத்தில் அகதி முகாங்களில் சுமார் ஒரு இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.
முகாங்களுக்கு வெளியில் சுமார் 40 ஆயிரம் பேர் அகதிகளாக பதிவு செய்யப்படாத உள்ளனர். இன்றைய கொரோனா பேரிடர் காலத்தில் இவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களை இடைக்கால அகதிகளாகவேனும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடல் மீன் தரையில் வாழாது. அதைப்போலவே வேரும் இலைகளும் பச்சையங்களும் வாடிப் போனதொரு, உக்கிப் போனதொரு செடியாகவே ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து உலகம் எங்கும் அலைந்துழல்கின்றனர்.
சொந்த மண்ணில் வாழ முடியாத நெருக்கடிகளால், ஒளிந்து வாழும் வாழ்வை தாங்க முடியாது மிகவும் அபாயமான வழிகளில் தாய் நிலத்தை விட்டு எமது மக்கள் பெயர்கின்றனர். இன்றைக்கு உலக நாடுகள் பலவற்றிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். ஈழ மண்ணிலிருந்து சிதறிப்போன நிலையில் உலகப் பந்து முழுவதும் வீசப்பட்டதொரு வாழ்வே அவர்களுடைய வாழ்வு.
பொருளாதார அகதிகள்
அவுஸ்ரேலிய அகதிமுகாங்களில் பல ஈழத் தமிழர்கள் நாடு கடத்தும் அபாயத்துடன் வாழ்கின்றனர். அவர்களில் பலரும் தாயகத்தில் இருந்து பல்வேறு அச்சுறுத்தல்களினால் நாடு பெயர்ந்ததவர்கள். போர் முடிவுக்கு வந்த பின்னர், முன்னாள் போராளிகள், பொதுமக்களை அச்சுறுத்திய அரசு, அவர்களின் நிலங்களையும் இருந்த சொத்துக்களையும் பறித்துக் கொண்டு அவர்களின் படகுகளில் ஏற்றி புலம்பெயர வைத்தது.
மீண்டும் அவர்கள் நாடு திரும்ப முடியாது. அச்சுறுத்தல் ஒரு புறம். இனியவர்கள், நாடு திரும்பி வாழ்வதற்கு எந்தவொரு ஆதாரமும் இங்கே இல்லை. இலங்கை அரசு, நன்கு திட்டமிட்டே வேரோடு பிடுங்கி எறிந்து விட்டது. இன்றைக்கு ஈழத் தமிழர்கள் இல்லாத நாடு உலகில் இல்லை. ஆனால் ஈழத் தமிழர்களுக்கென்று இருக்கும் நாடு அவர்களின் கையில் இல்லை. பிறந்த மண்ணைவிட்டு இன்னொரு நிலத்தில் வாழும் அகதி வாழ்க்கை மிகவும் கொடியது.
ஆனால் சொந்த மண்ணிலேயே அகதிபோல் வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? இப்போது பொருளாதார நெருக்கடியால் கணிசமானவர்கள், ஈழத்தை விட்டு பெயர்கிறார்கள். தமிழ்நாட்டிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் ஈழத் தமிழர்களின் எணிக்கை அதிகரித்துவிட்டது.இப்போதும் நாங்கள்தான் அகதியாகிக் கொண்டிருக்கிறோம். எங்கள் சனவிகிதம்தான் குறைகிறது.
அகதிகள் ஆகாத ஈழத் தமிழரும் இல்லை
உலகமெங்கும் ஈழத் தமிழ் அகதிகள் இல்லாத நாடுகளே இல்லை என்பதைப் போலவே அகதிகள் ஆகாத ஈழத் தமிழர்களும் இல்லை என்பதும் இந்த நூற்றாண்டின் பெருந்துயரம். ஈழத்தில் போர் நடந்து முப்பது வருடங்கள் என்றால், ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அலைவுறத் தொடங்கியும் முப்பது வருடங்கள் கடந்தும் அலைகின்றனர் என்றே அர்த்தமாகும்.
உலகில் எந்தவொரு இனக் குழுவும் தமது சொந்த மண்ணைவிட்டு, மிக விருப்பத்துடன் புலம்பெயர்வதில்லை. அதுவொரு மரண வலி. புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழர்களின் முகங்களிலும் வார்த்தைகளிலும் அந்த வலியை தெரிந்து கொள்ள முடியும். இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும் தாய்நிலம் விடுதலையடைய வேண்டும் என்பதும்தான் உலகமெங்கும் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழ் மக்களின் ஏக்கமும் கனவும். அகதி என்ற வாழ்வையும் அதற்குரிய ஆயுதமாக அவர்கள் உபயோகித்து வருகின்றனர்.
இனிவரும் தலைமுறைகளுக்கு இடம்பெயர்வும் புலம்பெயர்வும் வேண்டாம் என்பதே ஈழ அகதிகளின் வலியுறுத்தல். உலகின் எந்தவொரு சனங்களும் அகதியாக அலைந்துழக்கூடாது என்பதே அவர்தம் பிரார்த்தனை. அதற்கு ஈழம் விடையாகவும் தீர்வாகவும் கரங்களில் நெருப்பேந்திய போராட்டமாகவும் இருக்கிறது.அகதியாய் இருத்தல் என்ற துயரம் எவருக்கும் வேண்டாம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 19 June, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.