பேரழிவு நிலை உருவாகலாம் - அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை (படங்கள்)
அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது காவல்துறையினர் நடத்திய அடக்குமுறைக்கு ஓமல்பே சோபித தேரர் கண்டனம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் நேற்றையதினம் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வண. ஓமல்பே சோபித தேரர்,
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை மேற்கொள்வது நியாயமானது. இவ்வாறான அமைதியான போராட்டங்களை நசுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் நாட்டில் வேறுவிதமான பேரழிவு நிலை உருவாகலாம்.
போராட்டத்தில் ஈடுபட்ட இருபாலரையும் சேர்ந்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்களை கைது செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் நாடாளுமன்ற நுழைவாயிலில் இடம்பெற்றதா என்பது சந்தேகமாக உள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான இவ்வாறான போராட்டங்களை நசுக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என காவல்துறையினரையும் சட்டத்தை அமுல்படுத்துபவர்களையும் மகா சங்கத்தினர் எச்சரிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் (04) நாடாளுமன்ற பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 13 பேரை பிணையில் விடுவிக்க கடுவளை பிரதான நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.





