வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! சூறாவளியாக வலுப்பெற வாய்ப்பு
இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (16) மாலை சூறாவளியாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (15) இரவு 11.30 அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து விலகி நகர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதி மற்றும் அதனை அண்மித்த மேற்கு மத்திய பகுதியில் சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம்
மேலும், நாளை (17) அளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் இது தீவிர சூறாவளியாக வலுப்பெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், குறித்த காற்றழுத்தத் தொகுதி இலங்கையிலிருந்து விலகிச் செல்வதால், நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |