22 ஆவது திருத்த சட்டமூலம் - பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு
பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்கும் நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (03) இரவு அதிபர் அலுவலகத்தில் கூடியதுடன், இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, கலாநிதி சரத் வீரசேகர, சிசிர ஜயக்கொடி மற்றும் பலர் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
கட்சிக்குள் கூட விவாதிக்காமல் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த வரைபு முன்வைக்கப்படுவதாக தெரிவித்துள்ள எம்.பி.க்கள், இது யாருடைய விருப்பத்திற்காக கொண்டு வரப்படும் என்பது பிரச்சினையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
துணியை அணிந்து கொண்டு வாக்களிக்க முடியுமா
அங்கு கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் இருபதாம் திருத்தத்திற்கும் ஆதரவளிக்கும் எம்.பி.க்கள் துணியை அணிந்து கொண்டு இருபத்தி இரண்டாம் திருத்தத்திற்கு வாக்களிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் இருபது உறுப்பினர்கள் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருபத்தி இரண்டாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக தெரிவித்ததாக காரியவசம் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை அதிபர் விட்டுக்கொடுக்கக் கூடாது
அங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, நிறைவேற்று அதிகாரத்தை அதிபர் விட்டுக்கொடுக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசா 89 பயங்கரவாதத்தை எதிர்கொண்டார், மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார், அதிபருக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்ததாலேயே அண்மைய மோதல்களில் நாடாளுமன்றத்தை காப்பாற்றினார் என திஸாநாயக்க குறிப்பிட்டார்.
எனவே நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, ஆளுநர்கள் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் அப்படியே இருக்கும் நிலையில் அதிபரின் அதிகாரங்களைக் குறைப்பது பிரச்சினையே எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்டது
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இதனை முன்வைத்தாலும் அது தனது சொந்த நலன்களுக்காக தயாரிக்கப்படவில்லை என்றும், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருபத்தி இரண்டாவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)